தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பலனாக கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தனி கவனம் செலுத்திட சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் சித்திக்,சமயமூர்த்தி மற்றும் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.