இல்லத்தரசிகளின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்புறங்களிலும் அஞ்சல சேமிப்பு திட்டங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. தற்போது அஞ்சல சேமிப்பு வங்கியில் உள்ள, சேமிப்பு கணக்கில் வங்கிகளில் உள்ளதை போன்றே சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் அஞ்சல சேமிப்பு கணக்கு
குறிப்பாக வங்கிக் கணக்கினை போலவே, ஆன்லைனிலேயேயும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த அஞ்சல சேமிப்பு கணக்கினை மொபைல் அப்ளிகேஷன் மூலம் தொடங்கிக் கொள்ள முடியும். இதனை பயன்படுத்தி சில அடிப்படை வங்கி சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். முன்பெல்லாம் எந்தவொரு சேவை என்றாலும், அஞ்சலகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை இருந்து. ஆனால் தற்போது ஆன்லைனிலேயே பல சேவைகள் வங்கிகளை போலவே, அஞ்சல வங்கிகளிலும் ஆன்லைன் சேவைகள் உள்ளன.
உதாரணத்திற்கு சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த, இருப்புதொகை பார்க்க, பணப்பரிமாற்றம் செய்ய, தொடர் வைப்பு நிதி, வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி என்ற பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனிலேயே பெற முடியும்.இதற்காக நீங்கள் முதலில் IPPB ஆப்பினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் டிஜிட்டல் சேமிப்பு கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். எனினும் இந்த சேமிப்பு கணக்கினை தொடங்க வாடிக்கையாளார்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியராகவும் இருக்க வேண்டும்.
முதலில் இந்த சேமிப்பு கணக்கினை தொடங்க, IPPB ஆப்பினை உங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒபன் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண் தேவைப்படும். இதனை பதிவு செய்த பிறகு, நீங்கள் பதிவு செய்ய மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். இதன் பிறகு உடனடியாக நீங்கள் ஒரு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
அதன் பிறகு உங்களது முக்கிய விவரங்கள், அதாவது அம்மா பெயர், கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். வேண்டிய விவரங்களை கொடுத்த பிறகு சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது சேமிப்பு கணக்கினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலிட் ஆக இருக்கும். இதனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக சென்று பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.