பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக வாலிபரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
அதன்பின் காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் டி.என். புதுக்குடி பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் பாம்பு கோவில் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருட முயற்சி செய்ததும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மார்க் கடையில் உள்ள மதுபாட்டில்களை திருட முயற்சி செய்த குற்றத்திற்காக கார்த்திக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.