ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. 3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சிபிஐ பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.
ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் :
பின்னர் மாலை 4 மணிக்கு ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர்.அப்போது ப.சிதம்பரத்திடம் பேச முற்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணைக்கு சென்றார்.
குற்றவாளிக்கூண்டில் சிதம்பரம் :
பின்னர் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் முன்பு ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்.இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன் வைத்தனர்.
சிபிஐ தரப்பு வாதம் :
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் இருந்து ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார்.எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.இவர் மீது வெளிவர முடியாத பிணை இருக்கின்றது.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக எந்த கேள்விக்கும் இவர் பதிலளிக்க வில்லை.
பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் வழக்கில் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது. குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தின் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டு வாதங்களை முன்வைக்கப்பட்டது.
கபில் சிபில் வாதம் :
ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபில் தன்னுடைய வாதங்களை முன்வைத்து பேசும் போது , கார்த்திக் சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது எனவே ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டதால் காவலில் வைப்பது அவசியமற்றதுஇது ஒரு கூட்டு சதி. ப.சிதம்பரம் ஜாமீனில் இருந்தாலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார். ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்றால் இவ்வளவு நாள் சிபிஐ என்ன செய்து கொண்டு இருந்தது.
நேற்று அவசரஅவசரமாக கைது செய்து இரவு சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்றும் எந்த விசாரணையும் நடத்த வில்லை. இன்று காலை தான் விசாரணை செய்துள்ளனர்.இவ்வளவு அவசரமான கைது எதற்கு. கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப கேட்பதன் அவசியம் என்ன? வெறும் 12 கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர். சிபிஐ என்னென்னெ கேள்விகளை கேட்டார்கள் என்பதை இங்கே சமர்ப்பிக்க வேண்டும். அவரின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்த்தது தவறு.இதில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை.சிபிஐ_யின் அடிப்படை ஆதாரமென்ற குற்றச்சாட்டுக்காக 24 மணி நேரம் தூங்கவில்லை. சிபிஐ கேட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே பதிலளித்தவை என்று கபில்சிபில் வாதாடினார்.
அபிஷேக் மனு சிங்வி வாதம்:
ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞ்சர் அபிஷேக் மனு சிங்வி தந்தரப்பு வாதங்களை முன்வைக்கும் போது , இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும்.
அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே தவிர. சாட்சியம் இல்லை. ஐ.என்.எக்ஸ் வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடைபெற வில்லை. வேறு எதற்காகவோ நடைபெறுகின்றது. வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சிபிஐ இத்தனை நாள் என்ன செய்தார்கள் என்று அபிஷேக் மனு சிங்வி தன்னுடைய வாதத்தை தெரிவித்தார்.
வழக்கறிஞ்சர்களுக்குள் வாக்குவாதம் :
அனைத்து விசாரணையும் முடிந்து விட்டதால் இன்னும் விசாரிக்க தேவை இல்லை.அப்படி விசாரிக்க வேண்டுமென்றால் ப.சிதம்பரம் நீதிபதி முன்பாக நிற்கின்றார். வேணுமென்றால் நீதிபதி தேவையான கேள்விகளை கேட்கலாம் என்று அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.
அப்போது ப.சிதம்பரம் பேச முற்பட்ட போது சிபிஐ வழக்கறிஞ்சர் துஷார் மேத்தா குறிக்கிட்டதால் துஷார் மேத்தா_வுக்கும் அபிஷேக் மனு சிங்வி_க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து இதில் ப.சிதம்பரத்திற்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் என்று சிபிஐ_க்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அனல் பறக்கும் விவாதம் :
பின்னர் அனல் பறக்கும் விவாதம் மாறிமாறி நடைபெற்றது. இதில் சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் என்று கூறிய சிபிஐ தரப்பு அவருக்கு ஏதும் சலுகை அளிக்க கூடாது. ஆதாரம் இருப்பதால் ப.சிதம்பரத்தை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வாதாடியது.
இதையடுத்து ப.சிதம்பரம் நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்ற வழக்கில் வாதம் மற்றும் பிரதிவாதத்தை கேட்டறிந்து தீர்ப்பை ஒத்திவைத்து பின்னர் அறிவிக்கப்படுமென்று நீதிபதி உத்தவிட்டிருந்தார். இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.பின்னர் ப.சிதம்பரத்துக்கு 5 நாட்கள் சிபிஐ காவல் என்று கூறி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் ப.சிதம்பரம் வருகின்ற 26-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருப்பார்.இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.