முறைகேடாக பயன்படுத்தினால் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், கேரட் அறுவடைக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வாகனங்கள் என அனைவரும் அனுமதிச் சீட்டு பெற்று செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் விற்பனைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்பவர்களின் ஆவணங்களை சரி பார்த்த பிறகு அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கிராமங்களில் காய்கறி, பழங்களை விற்பனை செய்வதாக கூறி அனுமதிச் சீட்டினை சிலர் வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் ஊட்டி நகர பகுதியில் பழம் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் தேவையான பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் விற்பனை செய்ததற்காக ஓரிடத்தில் அனுமதி பெற்று, மற்றோரிடத்தில் விற்பனை செய்தால் அவர்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.