இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் மாரி கண்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரும் திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் துவரிமான் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கோச்சடை பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு குபேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.