டிரோன் கேமராவை பார்த்தவுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் அடித்துப்பிடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள மைதானப் பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டரான சுகுமாரன் தலைமையில் காவல்துறையினர் டிரோன் கேமரா மூலம் அப்பகுதியை கண்காணித்து வந்துள்ளனர். இவ்வாறு டிரோன் கேமராவானது அந்த மைதானத்திற்கு மேலே பறந்து வருவதை இளைஞர்கள் பார்த்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் தலைதெறிக்க மிரண்டு ஓடிவிட்டனர். அதற்குள் அங்கு ஜீப்பில் விரைந்து வந்த காவல்துறையினர், சிக்கிய ஒரு சில இளைஞர்களிடம் ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோல் விதிமீறல்களை மீறி வெளியே சென்று விளையாடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.