ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் ஆதிவாசி மக்களுக்கு அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மூலக்காடு ஆதிவாசி கிராமத்தில் 36 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் வேலை இல்லாமல் இந்த ஆதிவாசி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதில் சில குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு இல்லாததால் ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு உதவி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கூடலூர் ஆர்.டி.ஓ ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் அந்த ஆதிவாசி கிராமத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கு ரேஷன் கார்டு இல்லாமல் இருந்த 6 ஆதிவாசி குடும்பத்தினரின் பெயர் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து ரேஷன் கார்டு வாங்குவதற்காக அதிகாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அதன்பின் அதிகாரிகள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் வாடும் அந்த குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கூட்டுக் குடும்பமாக வசித்ததால் சிலர் ரேஷன் கார்டு வாங்காமல் இருப்பதாகவும், புதிய ரேஷன் கார்டு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.