சட்டவிரோதமாக ரயிலில் கடத்தப்பட்ட மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் ரயில்களில் மது பாக்கெட்டுகளை கடத்தி வருவதாக ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சென்னப்பட்டு பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 43 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதேபோன்று 3-வது பிளாட்பாரத்தில் சுற்றித்திரிந்த அம்மூர் சைதாப்பேட்டை தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவரிடமிருந்தும் 750 மில்லி கொள்ளளவு கொண்ட 4 மது பாட்டில்கள் மற்றும் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 112 மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சென்னப்பட்டு பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம் என்பவரிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 30 மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.