இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் கரேலா பெந்த்ரா மர்வாகி என்ற மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பழங்குடியினர் மருத்துவ உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் பழங்குடியினர் நலத் துறை அலுவலகங்கள், துறைக்கு உட்பட்ட ஆசிரமங்கள், மருத்துவமனையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறி விட்டால் அடுத்த மாத சம்பளம் கிடையாது என்று கூறியுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.