மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை ராஜ்குமார் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வீட்டில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், 25 பேர் கொண்ட குழு ராஜ்குமார் தங்கியிருக்கும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது ஒரு அறையில் 1,000 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருப்பதையும், மற்றொரு அறையில் வெளிமாநில மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் இருப்பதையும் காவல்துறையினர் பார்த்துள்ளனர். இவ்வாறு மொத்தம் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ராஜ்குமாரையும், அவருடன் சாராயம் மற்றும் மது விற்பனை செய்து கொண்டிருந்த கும்பலை பிடிப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.