இன்று நடைபெற உள்ள பிசிசிஐ – யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மீதமுள்ள ஐபிஎல் போட்டி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது .
பிசிசிஐ- யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. இந்தக் பொதுக்குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெறுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது . குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் ,அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய நகரங்களில் மீதமுள்ள போட்டியை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதோடு இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தேதி குறித்து,கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. ஆனால் ஐபிஎல் போட்டி மீண்டும் நடைபெறும் போது, இங்கிலாந்து அணி வீரர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியவை குறித்தும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலால் , போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தப் போட்டி இந்தியாவில் நடத்த முடியாமல் போனால், இதற்கு மாற்றாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருகின்ற 1ம் தேதி ஐசிசி-யுடன் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது, என்பதை வருகின்ற ஜூலை மாதம் வரை பொறுத்திருந்து, அதற்கேற்றவாறு முடிவெடுக்கலாம், என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.கடந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பரவலால் ,ரத்து செய்யப்பட்டதால் வீரர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் ,என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்திருந்த நிலையில் , இன்னும் வழங்கப்படவில்லை. எனவே இந்த தொகையை வழங்குவது குறித்து, கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.