தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு எழுதுபவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் முந்தைய எழுத்து தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறு தேர்வு வினாத்தாள் அமைப்பு இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நடப்பு செமஸ்டர் தேர்வுக்கு வினாத்தாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத்தேர்வு அடிப்படையில் இருக்கும். நடப்பு செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன்-7க்குள் விண்ணப்பித்து ஜூன்- 12க்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.