Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1093 டன்… முக்கிய இடங்களில் தீவிர பணி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாநகராட்சியில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் மாநகராட்சி கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றும் பணியை துவங்கி வைத்துள்ளார்.

இதனை அடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 113 முக்கிய இடங்களில் இருக்கும் சாலைகள் மற்றும் தெருக்களில் அதிக நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 15 மண்டலங்களிலும் 829 டன் கட்டிட கழிவுகள் மற்றும் 764 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே நாளில் மொத்தம் 1093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தீவிர தூய்மை பராமரிப்பு பணியை கண்காணிக்கும் பொருட்டு 15 மண்டலங்களுக்கும் 15 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கண்காணித்து அதுகுறித்த விவரங்களை உடனடியாக தலைமை இடத்திற்கு அனுப்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |