அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களை நிறுத்தி அபராதம் விதித்து காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் அவர்களை சமூக இடைவெளியோடு நிற்க வைத்து கைகளை நேராக நீட்டி முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் தேவை இல்லாமல் வெளியே சுற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்தனர். அதோடு பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.