தொழிற்சாலையில் விறகிற்கு பதில் நிலக்கரியை பயன்படுத்துவதால் அதிகளவு புகை வெளியேறி பொது மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணெரிமுக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தொழிற்சாலையில் தேயிலைத்தூள் தயாரிக்கும் போது விறகுக்கு பதிலாக நிலக்கரியை பயன்படுத்துகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமான புகை தொழிற்சாலையிலிருந்து வெளியேறுவதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற உடல் நலக் குறைவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, விறகுக்கு பதில் அந்த தொழிற்சாலையில் நிலக்கரியை பயன்படுத்துவதால் அளவுக்கு அதிகமான புகை வெளியாகிறது என்றும், இதனால் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.