கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்ட நபர்களை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெரு நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் மற்றும் அவசர கால உதவிகளை வழங்குவதற்கு பெரு நகராட்சி சார்பாக பணியாளர்களை நியமித்துள்ளனர். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேற்கொண்ட தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜிபூர் ரகுமான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன் பின் அவர் வெள்ளைக்குளம், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இருக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கின்றதா என்று கேட்ட பிறகு அவர்களிடம், அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். மேலும் நகராட்சி பகுதிகளில் மேற்கொண்ட கொரோனா தடுப்பு தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் மகேஷ்வரிடம் கேட்டுள்ளார்.