இந்தியாவிலிருந்து, அமெரிக்கா புறப்பட்ட விமானத்தில் வௌவால் இருந்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவிற்கு உரிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விமானம் சென்றுகொண்டிருக்கும்போது விமான பணியாளர்களுக்கான அறையில் ஒரு வௌவால் இருந்ததை பார்த்துள்ளனர்.
அந்த வௌவால் விமானத்திற்குள் பறந்ததால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அலறியுள்ளனர். இதனால் பணியாளர்கள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் மீண்டும் டெல்லி திருப்புவதற்கு தீர்மானித்துள்ளனர். விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்தில் திரும்பியதால், அவசர காரணமாக தரையிறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விமானம் தரையிறங்கிய பின்பு தான் விமானத்திற்குள் வௌவால் இருந்ததால் தரையிறக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. வனத்துறை ஊழியர்களை அழைத்து வௌவால் அங்கிருந்து நீக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் பயணிகள் வேறு விமானத்தில் நெவார்க் புறப்பட்டுள்ளனர்.