போதைக்காக சோடாவில் சானிடைசரை கலந்து குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் மூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் இல்லாமல் தவித்துள்ளார்.
எனவே மூர்த்தி சோடாவில் சானிடைசரை கலந்து குடித்ததால் அவருக்கு கண் பார்வை மங்கி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.