சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் காவல்துறையினருக்கு நஞ்சகவுண்டன் புதூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை கட்டிடத்தின் பின்புறம் ஒரு முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் மது பாட்டில் விற்பனை செய்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பதும், டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 359 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, காளி முத்துவை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.