மொபட் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் தனது மொபட்டில் புது ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் இவரின் மொபட்டின் மீது மோதி விட்டது.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.