தனது தந்தையை தாக்கிய மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20வயதுடைய ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா போதை மயக்கத்திற்காக ஒயிட்னர் குடித்துவிட்டு தனது தந்தையான முருகனிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ராஜாவின் தந்தையான முருகன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனது மகன் இவ்வாறு செய்கிறான் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராஜா ஒயிட்னரை குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று தனது தந்தையிடம் எதற்காக தன்னைப்பற்றி எல்லோரிடமும் தவறாக கூறினீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கு ராஜாவின் தந்தையான முருகன் நீ திருந்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறினேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராஜா கோபம் அடைந்து அங்கிருந்த கம்பியை எடுத்து தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அதன்பிறகு முருகன் சிகிக்சை பெற்று அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதால் ராஜா மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது தந்தையை தாக்கிய குற்ற உணர்ச்சியில் இருந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராஜாவின் தாயான திருமலை தூங்கி கொண்டிருக்கும் தனது மகனை எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.