கோவையில் 16 வயது சிறுமியை 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியை சேர்ந்த சிறுமி (16 வயது) கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தெருவான அம்மன் குளத்தில் வசித்துவரும் ஜோஸ்வா (வயது 29) தான் அந்த சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த சிறுமியை மீட்ட போலீசார் ரவுடி ஜோஸ்வாவையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்4 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஜோஸ்வா மீது கொலை வழக்கு (3), வழிப்பறி வழக்கு (10), கொலை முயற்சி உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வா காவல்நிலையத்திற்கு அழைத்து வரும்போது வழியில் சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்து அவரது கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜோஸ்வா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.