ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவித்த தம்பதிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் அவசர அழைப்பு அறையின் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் உதவி கேட்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை அவசர அழைப்பு எண்ணிற்கு நிலக்கோட்டையில் வசித்து வரும் ரோகிணி என்ற மூதாட்டி தொடர்புகொண்டு ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட காவல்துறையினர் சார்பில், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகனுக்கு பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நிலக்கோட்டையில் இருக்கும் காமராஜர் நகரில் அமைந்துள்ள பிச்சையின் வீட்டிற்கு போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது பிச்சை தான் கொடைக்கானலில் காவலாளியாக பணி புரிவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு நேரத்தில் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் தவிப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டவுடன் தனது சொந்த செலவில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் ரோகிணிக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியதுடன் 2,000 ரூபாயும் சேர்த்து கொடுத்துள்ளார். இவ்வாறு போலீஸ் துணை சூப்பிரண்டு செய்த உதவிக்கு தம்பதியினர் இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.