நோயாளி கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் துவாக்குடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆரோக்கியராஜ் திடீரென சிகிச்சை மையத்தின் 2-வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அவரது கீழ் தாடை மற்றும் இடது தொடை எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.
அதன்பின் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆரோக்கிய ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குடும்ப பிரச்சனை மற்றும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஆரோக்கியராஜ் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.