பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்-சுடர்மதி என்ற தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாக மாமியார் வீடான பத்தலப் பல்லி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வின்ராஜ், ரோஷன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின்ராஜிக்கு காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் அஸ்வின்ராஜை பரிசோதனை செய்யாமலயே அங்கிருந்த செவிலியரிடம் போன் மூலம் அவருக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்கும்படி கூறியதாக தெரிகின்றது.
இதனையடுத்து அஸ்வின்ராஜை அவரது பெற்றோர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் மீண்டும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அஸ்வின்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தான் அஸ்வின்ராஜ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். எனவே மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனையின் முன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஹேமலதா, பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, மருத்துவ அதிகாரி திருஞானம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அஸ்வின்ராஜ் இறந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அதன்பின் அவர்கள் அஸ்வின்ராஜ் சடலத்தை பெற்றுச் சென்றனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், மருத்துவ இணை இயக்குனர் ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.