முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுறை, வேளாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பார்த்திபன் பேசியபோது, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டியின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பழங்கள், காய்கறிகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவை தடையின்றி கிடைக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் பார்த்திபன் கூறியுள்ளார். அதன்பின் காய்கறிகள், பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் மளிகைப் பொருட்களை மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் சில்லரை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதன்பின் மளிகை கடைகளை திறப்பதற்கும், மளிகை பொருட்களை வாகனங்களில் விற்பனை செய்வதற்கு விற்பனையாளர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று செல்லவேண்டும். எனவே பொதுமக்கள் ஆர்டர் ஏதேனும் கேட்டால் வியாபாரிகள் கடைகளை திறந்து அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பொருட்களை அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று கலெக்டர் பார்த்திபன் கூறியுள்ளார்.