வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி (வயது 48) பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தொடர்பான வீடியோ வெளிவந்தது.
இதனையடுத்து நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்ததையடுத்து லண்டன் போலீசார் அவரை கடந்த மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் அவரது காவல் முடிந்த நிலையில்,நேற்று அவர் வீடியோ கான்பிரன்சிங் முறையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி டான் இக்ராம் உத்தரவிட்டார். மேலும் அவரை நாடுகடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு 2020 மே மாதம் 11-ம் தேதி தொடங்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.