பிரான்சில் நேற்று காவல்துறையினரை தாக்கிய ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து, ஜெர்மனிலும் காவல்துறையினரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜெர்மன் நகரமான ஹாம்பர்க்-ல் ஒருவர் கத்தியை காட்டி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டுவதாகவும், கார்களை சேதப்படுத்துவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் கத்தியுடன் அவர்களை நோக்கி பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த நபரை முதலில் பெப்பர் ஸ்பிரே அடித்தும், டேஸர் கொண்டு தாக்கியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ஆனால் அந்த நபர் யார் ? எதற்காக தாக்குதலில் ஈடுபட்டார் ? எந்த நாட்டை சேர்ந்தவர் ?என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.