ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை புறப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் சோதனையிட்டதில் பயணிகள் இருக்கையில் 195 கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த ஒருவரை சந்தேகத்தின்படி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஒன்டிவட்டம் பகுதியில் வசிக்கும் பாபு என்பதும், இவர் பெங்களூர் மாநகராட்சியில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அதன்பின் பாபுவிடம் இருந்த மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர். இதேபோன்று மும்பையில் இருந்து புதுச்சேரி செல்லும் தாதார் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் திருக்கோவிலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து 224 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரஞ்சித் குமாரிடம் இருந்த மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் கீழே கிடந்த ஒரு பையை எடுத்து காவல்துறையினர் சோதனை செய்ததில் அதிலும் 275 கர்நாடகா மாநிலம் அது பாக்கெட்டுகள் இருந்ததால் அதையும் கைப்பற்றினர்.