ரேசன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் வழியாக திருப்பத்தூரில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட கலெக்டர் பார்த்திபன் உத்தரவின்படி பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பள்ளிகொண்டான் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் பல்வேறு முட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குடியாத்தம் தாலுகா நத்தமேடு கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. இவர் வாணியம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 253 மூட்டைகளில் 12 1/2 டன் ரேஷன் அரிசியை வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திராவிற்கு கடத்திச் சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அரிசி மூட்டை மற்றும் லாரியை பறிமுதல் செய்து அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அரவிந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரியின் உரிமையாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.