வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வால்பாறை நகரில் இருக்கும் மருந்து கடைகள், ஏ.டி.எம் மையங்கள் போன்ற இடங்களில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாரின் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்கு வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த நபரை அருகில் இருக்கும் சிகிச்சை மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.