வனப்பகுதியில் கழுதை புலிகளின் நடமாட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட சிங்காரா, சீகூர், மசினகுடி போன்ற வனப்பகுதியில் கரடிகள், புலி, அரிய வகை கழுதைப் புலிகள் மற்றும் பிணந்தின்னிக் கழுகுகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி, கழுதை புலிகளின் எண்ணிக்கை 13-ஆக இருந்துள்ளது.
மேலும் நடப்பாண்டில் கழுதை புலிகளின் எண்ணிக்கையானது வனப்பகுதிகளின் தன்மைக்கேற்ப அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கழுதை புலிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருப்பதாகவும், வனப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கழுதை புலிகளின் உருவங்கள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சரியாக எத்தனை கழுதை புலிகள் இருக்கின்றது என்பது குறித்து கூற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.