Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரிடம் ரகளை… தப்பித்த முக்கிய குற்றவாளிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

சப் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு 3 குற்றவாளிகள் காவல் நிலையத்தில் இருந்து தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் அசோக் பில்லர் அருகில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 3 பேரை காவல்துறையினர் விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் அங்கு சுற்றித் திரிந்த அவர்கள் அஜித் குமார், ஜெகதீஸ்வரன் மற்றும் அஜய் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 3 பேர் மீதும் ஏராளமான குற்ற வழங்குகள் நிலுவையில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருக்கும் லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 குற்றவாளிகளுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜெயக்குமார் என்பவர் மூன்று குற்றவாளிகளையும் கண்டித்த பிறகும் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லாக்கப்பில் இருந்து மூன்று பேரையும் வெளியேற்றி தனித்தனியாக அமர வைத்த போது அஜித் குமார் காவல் நிலையத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அதனை தடுக்க முயற்சித்த போது, அவரை கீழே தள்ளிவிட்டு 3 குற்றவாளிகளும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். அதன் பிறகு வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய 3 குற்றவாளிகளையும் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |