மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த நிலையில், ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் , பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 ம் தேதி முதல் அக்டோபர் 10 ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி, ஆகஸ்ட் 28 ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 19-ம் தேதி வரை நடைபெறுவதால் , மீதமுள்ள ஐபில் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .இதனால் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டியை முன்பாகவே நடத்தக்கோரி பிசிசிஐ, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ” வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதனால் சிபிஎல் போட்டியை முன்கூட்டி முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டி முன்கூட்டியே முடிந்தால்,வீரர்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து , ஐபிஎல்’ பயோ பபுள்’ வளையத்திற்குள் மாற உதவும். 3 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலும் காலமும் முன்கூட்டியே நிறைவடையும் ” என்று கூறினார்.ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் , ஐபில் போட்டியில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிலர் , மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். இதில் பிராவோ(சிஎஸ்கே), பொல்லார்ட்(மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெய்ல் மற்றும் நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), ஹெட்மயர் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன் ரைசஸ் ஐதராபாத்), சுனில் நரீன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகிய வீரர்கள் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் .