மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடை, கையுறை மற்றும் முக கவசம் போன்றவை திறந்த வெளியில் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இருக்கும் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் பணியின் போது பயன்படுத்திய முககவசம், கவச உடை மற்றும் கையுறை போன்றவற்றை பாதுகாப்புடன் வைக்காமல் சிறப்பு வார்டுக்கு சில அடி தூரத்தில் இருக்கும் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ளனர்.
இவ்வாறு அரசு நெறிப்படுத்திய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் திறந்த வெளியில் முககவசம், கவச உடை மற்றும் கையுறை போன்றவற்றை குவித்து வைத்திருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறப்பு வார்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடை, முகக்கவசம் மற்றும் கையுறை போன்றவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.