இன்று நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் , 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
ஐசிசி கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை இந்தியாவில் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலால் , இந்தப் போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாமல் போனால் ,மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக ஐசிசி-யிடம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ,சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவு எடுப்பதற்கு பிசிசிஐ சார்பில் ,ஒரு மாத காலம் அவகாசம் கேட்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான வாய்ப்பில்லை என்பதால், வருகின்ற ஜூலை 18 ம் தேதி நடக்கும் ஐசிசி-யின் வருடாந்திர கூட்டத்தில் போட்டியை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடந்தால் , மத்திய அரசிடமிருந்து வரிவிலக்குப் பெற வேண்டுமென்று ஐசிசி வற்புறுத்துகிறது .
ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக, பொருளாதாரப் பிரச்சினை நிலவுவதால் இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து வரி விலக்கு பெறுவது கடினமான ஒன்றாகும்.இதை தொடர்ந்து அடுத்த 8 ஆண்டுகளுக்கான (2023-2031) கிரிக்கெட் போட்டி அட்டவணையை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனா தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் , அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை எங்கு நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்படுகிறது . அதோடு பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது தொடர்பாகவும் , ஆலோசனை நடைபெறும் . 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் , கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்தும்ஆலோசிக்கப்பட உள்ளது.