டேங்கர் லாரியின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைப்பட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் ஆம்னி வேனில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இந்த ஆம்னி வேனில் ரமேஷின் மனைவி தீபா, மகன் நித்திஷ், உறவினர்களான அஞ்சலி, சரளா மற்றும் சரிகா, ஓவியா என்ற 2 சிறுமிகள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரியின் மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விட்டது. இந்த விபத்தில் ரமேஷ், தீபா, நித்திஷ், அஞ்சலி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சிறுமிகள் ஓவியா, சரிகா மற்றும் சரளா ஆகியோரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் ஓவியா மற்றும் சரிகாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை காவல் துறையினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.