சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மூன்று பள்ளிகளுக்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை அடையாறு கேந்திரியா வித்யாலயா பள்ளி, கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் நாமக்கலில் உள்ள பள்ளி ஒன்றுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.