முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சுற்றித்திரிந்த 25 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினர் கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக சேலம் மெயின் ரோடு, கச்சராபாளையம் சாலை, சங்கராபுரம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது மருந்து வாங்குவதற்கு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வாகனங்களில் செல்பவர்களை தவிர மற்ற நபர்களை காவல்துறையினர் எச்சரித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் படி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 3 ஆட்டோக்கள், 1 மினி லாரி மற்றும் 21 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.