சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவ மாணவியர்கள் ஆன்லைன் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து அண்மையில் தீவிர ஆலோசனையை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வந்தது.
தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் பொது தேர்வு நடத்த ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது. பின்னர் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொதுத் தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி நாடு முழுவதும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மாணவர்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முக்கியம். அதில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்ற கூறியுள்ளார். விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் உரிய முறைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.