தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவ அவசரம், இறப்பு, இறப்புக்குப் பிறகு செய்யப்படும் சடங்குகள், சிறப்பு கவனம் தேவைப் படுவோருக்கு உரிய உதவிகளை செய்வோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வோர் இணைய பதிவினை மேற்கொண்டு இந்த பணிகளில் ஈடுபடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குழந்தைகள் நல மையம், கூர்நோக்கு இல்லங்களில் பணியாற்றி வரும் இணைய பதிவுக்கு விண்ணப்பித்து தங்கள் பணிகளை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.