சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் அதிக அளவில் பலியாகியுள்ளதாக பதிவிட்ட பிரபல சீன பிளாக்கருக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சீன மற்றும் இந்திய வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியின் எல்லையில் மோதல் ஏற்பட்டது. அதில் சீன தரப்பில் 40 வீரர்களும், இந்திய தரப்பில் 20 வீரர்களும் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. இதனை சீனா ஏற்க மறுத்தது. சீனாவின் பிரபல பிளாக்கர் குய்யு ஜிமிங்-ஐ 25 மில்லியன் பேர் சமூக வலைதளங்களில் பின்பற்றுகின்றனர். இவர் லபிக்சியாவ்குய்யு என்ற பெயரில் ஆன்லைனில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் நிருபராக வாராந்திர செய்தி இதழ் ஒன்றில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்.
ஆனால் இவர் சீன தளபதி ஒருவர் இந்திய வீரர்களுடனான எல்லை மோதலில் உயிர் தப்பியதாகவும், அவர் உயர்பதவியில் இருந்ததாலேயே உயிர் தப்பினார் என்று தனது பிளாக்கில் பதிவு செய்துள்ளார். அதேசமயம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் ஈடுபட்ட சீன வீரர்களுடைய பலி எண்ணிக்கை அதிகம் என்று மற்றொரு பதிவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து சீனா முதன்முறையாக இந்தியாவுடனான மோதலில் 4 சீன வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார் என்று ஒப்புக்கொண்டதையடுத்து அதனை குய்யு பதிவிட்டுள்ளார். இது வீர மரணம் அடைந்த சீன வீரர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது என்று குய்யுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து சீனாவின் கிழக்கே அமைந்த ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் நீதிமன்றம் குய்யுவுக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் பிரபல வலைதளம் மற்றும் தேசிய ஊடகம் வழியே வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.