ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17 1/2 பவுன் நகை மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழபுனவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் லால்குடி பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் கீழபுனவாசல் பகுதியில் இருக்கும் தனது வீட்டை பூட்டி விட்டு திருவையாறு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று கீழபுனவாசல் பகுதியில் உள்ள வீட்டுக்கு கோவிந்தராஜ் சென்ற போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 1/2 பவுன் நகைகள் மற்றும் துணிகள் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சில தடயங்களை சேகரித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 1/2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.