கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 21,065 நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
மேலும் இதில் 77 ,624 நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி தொடரந்து நடைபெற்று வந்துள்ளது.
இதனால் அனைத்து மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தடுப்பூசி போட வந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டுமென பொதுமக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் ஏற்கனவே தடுப்பூசி தட்டுப்பாட்டால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.