மினி லாரியில் ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஞானோதயம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, லட்சுமிநாராயணன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் மினி லாரியை சோதனை செய்யும் போது அதில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான புகையிலையை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரித்த போது அவர் பெங்களூருவை சேர்ந்த இளங்கோவன் என்பது தெரியவந்தது. மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு கடத்தி செல்ல முயன்றது காவல்துறையினருக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த மினி லாரியில் வந்த மற்றொரு நபரான ஜான்பாஸ்கோ என்பவர் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் மினிலாரியும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இளங்கோவை கைது செய்ததோடு தப்பி ஓடிய ஜான்பாஸ்கோவை தீவிரமாக தேடி வருகின்றனர்.