சீனாவில் சில மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே சீனாவில் தான் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. அதன் பின்பு ஒவ்வொரு நாடாக பரவத்தொடங்கி உலகம் முழுவதும் தீவிரமடைந்தது. தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி கொண்டிருக்கையில், சீனா கொரோனா பரவலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. குவாங்டாங் என்ற மாகாணத்தில் 10 நபர்களுக்கு சாதாரண கொரோனா தொற்றும், வேறு சில நகரங்களில் 14 நபர்களுக்கு பிற நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த தொற்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
ஷாங்காய் நகரத்தில் 6 நபர்கள், புஜியான் நகரில் 3 பேர், குவாங்டாங் நகரத்தில் மூவர் மற்றும் யுனான் நகரில் ஒருவர் மற்றும் சிசுவானில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. எனவே சீனா, குவாங்டாங் மாகாணத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.