என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக கேரள ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கேரளமாநிலம் திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட கன மழை வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று யாரிடமும் சொல்லாமல் அதனை மறைத்துக்கொண்டு செங்கண்ணுரில் உள்ள நிவாரண முகாமில் பொருட்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாட்களாக ஈடுபட்டு வந்தார்.
பின்னர் ஒன்பதாவது நாளில் அதிகாரிகள் இவரை பார்த்து கண்டறிய அவ்வளவுதான் இந்த தகவல் வெளி உலகத்துக்கு வந்தது. கண்ணன் கோபிநாதன் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் நிவாரண பணியில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஒரு ஐஏஎஸ் திகாரி இது போன்ற பொதுப் பணிகளில் ஈடுபட்டது நாடு முழுவதும் பாராட்டுகளை குவித்தது.
இந்த நிலையில் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார் இதுபற்றி அவர் பேசும்போது, நான் குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன். இந்த சிஸ்டத்தில் இருந்து கொண்டே இதனை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம் நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.
ஆனால் இங்கே என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை. நான் மக்களுக்கு ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது இன்னும் நிறைய செய்ய வேண்டும். இப்போது அரசு ஓய்வு இல்லத்தில் வசித்து வருகிறேன். அடுத்து எங்கே போகவேண்டும் என்று தெரியவில்லை என் மனைவி வேலை பார்க்கிறார்.. அவர் எனக்கு ஆதரவாக இருப்பது தைரியம் அளிக்கிறது. “நான் மற்றவர்களுக்கு குரல் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன், எனது ராஜினாமா எனது கருத்து சுதந்திரத்தை மீண்டும் தரும். இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எனக்குத் தெரியும், இது அரை நாள் மட்டுமே செய்தியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.