மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் பகுதியில் இருக்கும் மதுரவாயல் ஏரிக்கரை காந்தி தெருவில் கருப்புசாமி என்ற மீன் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது எதிரே வேகமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஆனால் அவரை காப்பாற்ற யாரும் முன்வராத காரணத்தினால் அவரது மனைவியின் கண் முன்னேயே கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த தங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.