ஊரடங்கின் விதிமுறைகளை மீறி ஊட்டிக்கு சுற்றுலா சென்ற 20 பேருக்கு அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்திற்கு உள்ளேயோ அல்லது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்கவோ இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினருக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் பின் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, அங்கு 20 பேர் இருந்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 20 பேரும் இ-பதிவு முறையை தவறாக பயன்படுத்தி ஊட்டிக்கு சுற்றுலா வந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தங்கும் விடுதியில் இருந்து அந்த சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் வெளியேற்றியதோடு, விதிமுறைகளை மீறி சுற்றுலா வந்த குற்றத்திற்காக அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதன்பின் அதிகாரிகள் அவர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.